நற்றிணையில் நாடகம் மற்றும் சிறுகதைக் கூறுகள்
முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்
ஒவ்வொரு படைப்புக்கும்
அதற்கே உரிய சிறப்பு வாய்ந்த ஊடகங்கள் உண்டு. எவ்வாறு ஓவியத்திற்கு வண்ணங்கள்
ஊடகமாக விளங்குகிறதோ அவ்வாறே சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றிற்கு எழுத்து ஊடகமாக உள்ளது.
நிகழ்த்துக்கலையான நாடகத்திற்கு காட்சிப்படுத்துதல் ஊடகமாக அமைகிறது. படைப்பாளன் இந்த ஊடகங்களை லாவகமாகக் கையாண்டு
தன் படைப்புகளை வெற்றிகரமாக வெளிப்படுத்தவேண்டும். சிறுகதை எழுத்தாளன் நல்லதொரு
கதைக்கருவை தேர்ந்தெடுத்து கோர்வையாக சிறுகதைக்குரிய கூறுகளோடு அதை வளர்த்தெடுத்து உருவாக்கவேண்டும்.
நிகழ்ச்சி, வருணனை, உரையாடல் போன்ற கூறுகளை செவ்வென கையாளும் செய்நேர்த்தித்
திறனில் ஒரு படைப்பாளனின் வெற்றி அமைகிறது.
சொல்ல வந்த கருத்தை நிகழ்ச்சியின்
வாயிலாக வருணனை, உரையாடல் ஆகிய கூறுகளோடு வெற்றிகரமாக எழுத்தாக்கம் செய்வதில்
சிறுகதைப் படைப்பு சிறப்படைகிறது. தான் சொல்ல நினைத்த மையக்கருத்துக்கு தொடர்பாக
பல்வேறு நிகழ்வுகளை இயைபுடன் இணைத்து கதைமாந்தர்களின் உரையாடல் மற்றும் செயல்களின்
வழி நிகழ்த்திக் காட்டுதல் நாடகமாகும். நிகழ்த்துக் கலையாகிய நாடகத்தில் கதைக்
களம் கதைக் கருவுக்கு ஏற்ப அமையவேண்டும். அதுபோன்றே கதை மாந்தர்களின் தோற்றப்பொலிவும்
அணிகலன்களும் ஆடையலங்காரங்களும் இருக்கவேண்டும். முன் நோக்கு மற்றும் பின் நோக்கு உத்தி மூலம் நிகழ்வுகளைக்
கோர்வைப்படுத்தி, கதை போக்குக்கு ஏற்ப சூழல்களைப் பின்புலமாக வைத்து அல்லது
வருணித்து, சில சமயம் கதையில் சொல்ல வேண்டிய செய்திகளையும் வருணனையின் வாயிலாகப்
புலப்படுத்தி, உரையாடல்களின் வாயிலாக கதையை வளர்த்து, நாடகத்தை உருவாக்கி
நிகழ்த்துக் கலையாக நடத்தவேண்டும். சிறுகதையிலோ கவிதையிலோ நாடகத்தின் கூறுகளான இசை,
பாடல், ஆடல் ஆகியன நேரடியாக இடம்பெற
வாய்ப்பில்லை. கதையில் ஆடலின் சிறப்பும் பாடலின் இனிமையும் வருணிக்கப்படலாம்.
கவிதையை வேண்டுமானால் ஒருவேளை இசை வடிவில்
பாடலாம். ஆனால் நாடகத்தில் மட்டுந்தான் இசை, பாடல்கள், ஆடல்கள் ஆகியன
இடம்பெறமுடியும். இசையும் ஆடலும் பாடலும்
நாடகத்திற்கு மட்டுமே உரிய தனிச்
சிறப்பாகும்
கதைச் சூழலுக்கு ஏற்ற
பின்புலத்தைக் காட்சிப்படுத்தும் உத்தி சிறுகதை மற்றும் நாடகக் கூறுகளில் ஒன்றாகக்
கருதப்படும். சான்றாக மகிழ்ச்சிச்
சூழலுக்கு அருவி, சோலை, மலைத்தொடர்கள் ஆகியவற்றையும் சோகக்காட்சிக்கு பின்புலமாக
பரந்த நிலப்பரப்பையும் காட்சிப்படுத்தும் உத்தியைக் கூறலாம். ஒன்றை
காட்சிப்படுத்தும்போது காட்சிக்கேற்ற சூழலைக் குறிக்கும் பின்புலம்,
கதைமாந்தர்களின் ஆடை அலங்காரங்கள், தோற்றமைப்பு, இவற்றோடு அவர்களின் செயல்பாடுகளும்
உரையாடல்களும் ஒன்றோடொன்று இயைந்திருந்து நாடகக் காட்சிகள் அமைகின்றன.
எழுதப்படும் ஒரு கவிதையில்
அதன் மையக்கருத்துக்கு பொருத்தமான சூழலை எழுத்தில் படைத்து அதில் கதை மாந்தர்களின்
செயல்பாட்டினை விவரித்து இவற்றோடு பொருந்தும் வண்ணம் உவமைகளைக் கையாண்டு
பொருத்தமான கதைத்தளத்தை வருணனை செய்து படிப்போர் மனதில் சொல்ல வந்ததை தெளிவாக
காட்சிப்படுத்துவதில்தான் கவிதையின் சிறப்பும் வெற்றியும் அமைந்துள்ளன. எவ்வாறு
நாடகத்தின் வெற்றிக்கு கதைமாந்தர்கள், அவர்களின் தோற்றப்பொலிவு, காட்சிப்பின்புலம்,
உரையாடல், போன்ற கூறுகள் அமைகிறதோ அவ்வாறே ஒரு கவிதையிலும் இத்தகைய கூறுகள்
வருணனை, உவமை ஆகியவற்றின் வாயிலாக இடம்பெறுகின்றன. நாடகத்தில் காட்சிப்படுத்தப்படுவன
கவிதையில் எழுத்தாக்கம் பெறுகின்றன. காட்சிப்படுத்தப்படும்
நாடகத்தில் பார்த்தும் கேட்டும் ரசிக்கப்படுவது எழுத்தாக்கம் பெறும் சிறுகதையில்
மற்றும் கவிதையில் படித்தும் உணர்ந்தும், கற்பனையில்
உருவகித்தும் மனதால் சுவைக்கப்படுகிறது.
சங்க இலக்கிய நூலான
நற்றிணை 9-12 அடிகளில் 175 புலவர்களால் அகவற்பாவில் பாடப்பெற்ற 400 தனிப்பாடல்களாகும்.
இவை ஐந்திணை ஒழுக்கத்தை பற்றியன என்றாலும்
குறிஞ்சி, பாலை, நெய்தல் திணைப் பாடல்கள் நூற்றுக்கு மேல் உள்ளன.
சங்க கால அகப்படல்களில்
சொல்ல வந்த செய்தியை உருவகப்படுத்திக்
கூறுவர். சில சமயங்களில் வருணிக்கப்படும் கதைச்சூழல் அல்லது பின்புலக்காட்சி
கூறவந்த செய்தியை உள்ளுறையாக உணர்த்தும். இன்னும்
சில நேரங்களில் உள்ளுறையாகக் கூறியவற்றில் எஞ்சி நிற்கும் பொருள் இறைச்சி எனும் உத்தியாக
கவிதைகளில் கருதப்படுவதுண்டு. இவையெல்லாம் கவிதை மரபுகளாகவும் கவிதை
இலக்கணக்கூறுகளாகவும் போற்றப்பட்டு வந்துள்ளன.
இவற்றிற்கு மேலாக கவிதை
எழுதும் முறையில் ஒரு செய்தியை மறைத்துக் கூறும் முறையும் இருந்து வந்துள்ளது. இவை
சிலேடை என்று கருதப்பட்டன. கவிதைக்கு அழகு சேர்ப்பனவாக சிலேடையணிகள் இலக்கண நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.
”செங்கரங்களானிரவு நீக்குந் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம் பயிலப் – பொங்கு தயத்
தோராழி வெய்யோன் உயர்ந்த செறியொழுகும்
நீராழி நீணிலத்து மேல்”
எனும் தனிப்பாடல்
சூரியனையும் சோழ மன்னனையும் குறிப்பதால் இதனை செம்மொழி சிலேடையணிக்கு சான்றாகக்
கூறுவர். இவ்வாறே ”பாரதிச்சின்னப்பையல்’ எனும் தொடர் ”பார்! அதிச்சின்னப் பையல்”
என்றும் பாரதிச் சின்னப்பையல்” என்றும் பிரிந்து இருவகைப் பொருள் படுவதால் இதனை
பிரிமொழி சிலேடையணிக்கு சான்று காட்டுவர்.
ஆனால் இத்தகைய கவிதை
மரபுகளுக்கு மேலாக சித்தர் இலக்கியப் பாடல்மரபு வேறுபட்டும் சிறந்தும்
காணப்படுகிறது. சித்தர் பாடல்களில் சொற்கள்
குறிப்பிடும் நேர்ப்பொருளில் பாட்டின் பொருள் அமைவதில்லை. மாறாக சொற்கள் உணர்த்தும்
பொருள் வேறொன்றாக உணரப்படுகிறது. சான்றாக, ”பார்ப்பன் அகத்திலே பாற்பசு ஐந்து
உண்டு.....” எனும் சித்தர் பாடலுக்கு ‘பார்ப்பனர் வீட்டில் ஐந்து பசுக்கள் உள்ளன;
அவற்றை சரியாக மேய்த்து அவற்றின் வெறியை அடக்கினால் ’பசு ஐந்தும் பாலாய் சொரியும்’
என்று நேர்ப்பொருள் அமைகிறது.
ஆனால் இது பசு பால்
சொரிவதைப் பற்றி கூறும் சித்தர் பாடலாக யாரும் பொருள் கொள்வதில்லை. இப்பாடல்
ஐம்புலன்களை அடக்கி வாழ்வது பற்றியதாக பொருள் உரைக்கப்படுகிறது. எவ்வாறு இந்த மறைபொருள்
உணரப்படுகிறது.? ஆன்மீகத் தத்துவார்த்தங்களோடு சித்தர்கள் தொடர்புடையவர்கள்
என்பதால் அவர்களது பாடல்களும் அதன் அடிப்படையில் பொருள் கொள்ளப்படுவதாகக்
கருதலாம்.
இவ்வாறு நேர்ப்பொருள் ஒன்றிருக்க வேறொரு பொருள் கரந்து
உணர்த்தும் முறையில் பாட்டெழுதும் உத்தி பண்டை காலந்தொட்டு தமிழ் மொழியில்
காணப்படுகிறது. சங்க கால அகப்பாடல்களில் சில இந்த கரந்து பொருள் உணர்த்தும் உத்திமுறையில்
எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் என்னவோ இவற்றை ‘அகப்பாடல்கள்’ என்று சொன்னர்கள்.
நாடகத்தின் உரையாடலில் ஏற்ற இறக்கத்தோடு
பேசும்போது சாடையாக வேறொன்றை சுட்டும்
முறை உண்டு. ‘இது ரொம்ப நல்லாத்தான் இருக்கு” எனும் வாக்கியத்தை ஏற்ற இறக்கத்தோடு
கூறும் முறையில் எதிர்மறைப் பொருளை உணர்த்தலாம். நாடகத்தில் காணும் இந்த
சாடைப்பேச்சு கதைமாந்தர்களின் உரையாடலில் அமையும். ஆனால் சிறுகதையில் உரையாடலைத்
தொடர்ந்து எழுதப்படும் விளக்கத்தால் ‘இது சாடைப்பேச்சு’ என்று அறியலாம்.
நம் கவிதை மரபிலும் இந்த
சாடைப்பேச்சு முரண் வருணனை உத்தியால் உணர்த்தப்படுகிறது. சங்க அகப்பாடல்கள் பல
இந்த சாடை பேச்சு முறையை பின்பற்றியும் கரந்து
பொருள் உணர்த்தும் உத்தியிலும் படைக்கப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. கவிதையின்
அழகே வாசிப்பவருக்கு பல்வேறு பொருளை உணர்த்துவதில்தான் உள்ளது. அந்த வகையில்
சங்ககாலக் கவிதையின் சிறப்பிற்கு இத்தகைய பொருள் உணர்த்தும் உத்தி மேலும்
செறிவூட்டுகிறது.
உள்ளூர்
மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்
அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்
வெல்போர்ச்
சோழர் அழிசிஅம்பெருங்காட்டு
நெல்லி அம்
புளிச்சுவைக் கனவியாங்கு
அதுகழிந்
தன்றே தோழி அவர்நாட்டுப்
பனிஅரும்பு
உடைந்த பெருந்தாள் புன்னை
துரைமேய்
இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும்
சிறுகுடிப்
பரதவர் மகிழ்ச்சியும்
பெருந்தண்
கானலும் நினைந்த அப்பகலே.
(நற்றிணை, நக்கண்ணையார்,87. ப:158)
மேற்கூறிய நக்கண்ணையாரின் நெய்தல் திணை சார்ந்த இந்த நற்றிணைப்பாடல் தலைவனின்
பிரிவினைத் தாங்காத தலைவி வெளவால் கனவு
கண்டது போல தன் பகல் பொழுதில் வரும் நினைவு கழிகிறது என்று தோழியிடம் கூறுவதாக
அமைந்துள்ளது.
“உள்ளூர் மாமரத்தில் முள்ளைப் போல பற்கள்
கொண்ட வெளவால் உயர்ந்த கிளையில் தூங்கும்போது போரில் வெற்றி பெறும் சோழன்
அழிசியின் பெரிய காட்டிலுள்ள நெல்லியின் புளிப்புச் சுவையை கனவில் சுவைத்தது போல உடைந்த
ஈரமான மொட்டுகளையுடைய புன்னை மரப் பெருங்கிளை கரையில் மேயும் சிப்பியின் ஈரமான
முதுகின் மேல் படிந்திருக்கும் சிற்றூரைச் சேர்ந்த பரதவர் மகிழ்ச்சியையும் பெரிய
குளிர்ந்த சோலையையும் நினைத்த அந்தப் பகலிலே அவையெல்லாம் மறைந்து போயிற்று” என்பது
இப்பாடலின் பொருளாகக் கூறப்படுகிறது.
வெளவாலின் கனவு எவ்வாறு
உடனே மறைகிறதோ அது போல தலைவியின் நினைவும் மறைகிறது. வெளவாலின் கனவாக தலைவி எதைச்
சுட்டுகிறாள்? மாமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிற வெளவால் சோழ நாட்டுக் காட்டிலுள்ள
நெல்லி மரத்தின் புளிச்சுவையைக் கனவில் கண்டதாக தலைவி சுட்டுகிறாள்.
புளிப்பு சுவை கொண்ட மாங்காய்கள்
உள்ள மாமரத்தில் தொங்கியவாறு தூங்கிக்கொண்டிருக்கும் வெளவால் எங்கோ தூரத்திலுள்ள
சோழ நாட்டின் பெரிய காட்டிலுள்ள நெல்லிக்காய் புளிப்பு சுவைக்கு ஆசைப்பட்டது
என்பது சற்றும் பொருத்தமின்றி முரண்பட்டதாக உள்ளது. அத்துடன் அந்த புளிப்பு சுவையை “ நெல்லி அம்
புளிச்சுவை” என்று தலைவி கூறுகிறாள். அதாவது இது இனிப்பான புளிப்புச் சுவை என்று
பொருள். பொதுவாக கர்ப்பக்காலத்தில்தான் பெண்கள் புளிப்பானவற்றை விரும்பி
இனிப்பானதாக உண்பர் என்பதை நாம் இங்கே நினைவு கொள்ளவேண்டும்.”வெல்போர் சோழன்” என்ற
குறிப்பு கனவில் வெற்றி பெற அதாவது கனவிலாவது புளிப்புச்சுவையை அடைவதில் வெற்றி
பெற நினைக்கும் ஏக்கம் புலனாகிறது.
மேலும் பிரிவு
காலத்திலுள்ள தலைவி தலைவர் நாட்டு பரதவர் மகிழ்ச்சியையும் அங்குள்ள குளிர்ந்த
சோலையையும் நினைத்துவிட்டு பின்னர் கனவு போல அதை மறந்துவிடுவதாகக் கூறுகிறாள்.
பரதவர் பற்றிக் கூறும்போது அவர்கள் வாழும் உறைவிடத்தைச் சிறப்பித்து வருணனை செய்கிறாள். “பனி அரும்பு உடைந்த பெரிய திரண்ட புன்னை மரத்தண்டு
கடற்கரையில் மேய்ந்துகொண்டிருக்கும் சிப்பியின் மீது ஈரத்தை விட்டு
படுத்திருக்கும் சிற்றூர்” என்று வருணித்து அத்தகைய சிற்றூரில் வாழும் பரதவர்
என்று கூறுகிறாள். இந்த வருணனையை தலைவி தொடர்பின்றி கூறியிருப்பதாகச்
கருதமுடியாது.
மொட்டு விரிந்து ஈரத்தை வெளிவிட்ட திரட்சியான புன்னை மரத் தண்டு என்பது (விரைத்த) ஆணின்
உறுப்பை குறிப்பதாகக் கருதலாம். (குழிந்த) சங்கின் தோற்றம் பெண்ணின் உறுப்பையும் ஈரத்தை
சங்கின் மேல் புன்னை மரத் தண்டு விட்டது என்பது உடலுறவு கொண்டதையும் குறிக்கும். “சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சி”
எனும் தொடர் அந்த சிற்றூரில் இருக்கும் ஒரு பரதவரின் மகிழ்ச்சி என்று பொருள் கொண்டால்
இது தலைவனின் மகிழ்ச்சியை சுட்டுகிறது எனலாம். இந்த மகிழ்வான செயல் இடம்பெற்ற
குறியிடமாக குளிர்ந்த சோலையும் இங்கே
தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது.
கடலும் கடல் சார்ந்த
பகுதியுமாகிய நெய்தல் நிலத்தின் ஒழுக்கமாக இரங்கல் அமைந்திருப்பதால் தலைவனை
நினைத்து தலைவி வருந்துவதாக இப்பாடல் புனையப்பட்டுள்ளது. வருணனையில் நெய்தல்
நிலத்திற்குரிய புன்னை மரங்கள், சிப்பி, ஆகியவற்றை
பயன்படுத்தி தலைவியின் வருணனையில் அவளுக்கு தலைவனோடு உள்ள உறவு நிலையை மறைவாக
‘கரந்து பொருள் உணர்த்தும் உத்தி’ முறையில் புலப்படுத்தியிருப்பது சிறப்பானதாகும்.
வருணனை சிறுகதையில் அதிகம்
இடம்பெற வாய்ப்புண்டு. கதைமாந்தர்கள் பற்றிய வருணனை, கதைச்சூழல் தொடர்பான வருணனை,
என பல்வேறு வருணனைகள் வரலாம். இவையெல்லாம் கதைக்கு பொருத்தமாக அமைந்து சிறுகதையை
வெற்றியடையச் செய்ய வேண்டும். கதைக்கருவிற்கு ஏற்பவே கதைமாந்தர்களின் பெயர்கூட அமைக்கப்படும்.
சான்றாக, படித்த நவ நாகரீகப் பெண்ணைப் பற்றிய கதையாக இருப்பின் அவளது பெயர்
த்ரிஷா,தேஜா என்றிருக்குமேயன்றி அன்னலட்சுமி, ஆருக்காணி, ராஜராஜேஸ்வரியம்மாள் என்றிருக்காது எனத்
துணியலாம். அதுபோன்றே கதைக்கு ஏற்ற களம், சூழல் இவற்றோடு உவமை முதலியன நன்கு பொருந்தும்படி கூறப்படலாம்.
கண்ணும்
தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை
அல்குலும் பல பாராட்டி
நெரு நலும்
இவணர் மன்னே இன்றே
பெரு நீர்
ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன் இல்
நீளிடை மான் நசை உறூ உம்
சுடுமண்
தசும்பின் மத்தம் தின்ற
பிறவா
வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர்எழு களரி
ஒமை அம் காட்டு
வெயில்வீற்று
இருந்த வெம்பலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப
தாமே தம்வயின்
இரந்தோர்
மாற்றல் ஆற்றா
இல்லின்
வாழ்க்கை வல்லா தோரே. ( நற்றிணை, பாலை: 84, ப:152)
பாலை நில ஒழுக்கத்தைக் குறித்த இந்த நற்றிணைப்பாடல் தலைவன் பிரிந்த துயர் தாளாது தலைவி தோழியிடம்
புலம்பியதாக அமைகிறது. “என் கண்ணையும் தோளையும் அழகிய மணம் மிகுந்த கூந்தலையும் தேமல் மிக்க அல்குலையும் இன்னும் பலவற்றையும் பாராட்டி நேற்று நம்மோடு நம் தலைவர் இங்கிருந்தார்.
ஆனால் இன்றோ நீர் போலத் தெரியும் கானல் நீரினை விரும்பி ஓடும் மானைப்போல மண்ணால்
சுட்ட பானையில் மத்து தின்ற வெண்ணைய்ச்
சிதறலைப் போன்று உப்பு படர்ந்த ஓமைமரக் காட்டில் வெய்யில் மிகுந்த பாலை நிலத்தின்
வழியே தன்னந்தனியே சென்றார் கேட்டவருக்கு அவர் விருப்பம் போல கொடுக்கும்
இல்லத்தின் வாழ்க்கையில் வலிமையற்ற நம்
தலைவர்“ என்று தலைவி கூறுவதாக இப்பாடலின் பொருள்
கூறப்படுகிறது.
நேற்று தலைவியினைப் பாராட்டியபடி தலைவியோடு இருந்த தலைவனை ‘வல்லாதோர்’ என்று
சொல்கிறாள். அதாவது ‘வலிமையற்றவன்’ என்று
பொருள். எப்பேர்ப்பட்ட வலிமையற்றவன் என்றால் ‘இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின்
வாழ்க்கை’யில் வலிமையற்றாவனாக தலைவன் சித்தரிக்கப்படுகிறான். இல்வாழ்க்கை என்று
கூறாது இல்லின் வாழ்க்கை என்று கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. அதாவது வந்து
யாசிப்பவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது பொருளாசையைப் போக்குதற்குரிய
இல்லத்திலுள்ள வாழ்க்கையில்(இல்லில் உள்ள வாழ்க்கையில் அதாவது அக வாழ்க்கையில்)
வலிமையற்றவனாக தலைவன் வருணிக்கப்படுகிறான். தலைவி என்ன யாசித்தாள்? என்ன தலைவனால் தலைவிக்கு
கொடுக்கமுடியாது போயிற்று? எதனால் தலைவி வலிமையற்றவனாக தலைவனைக் கருதி
வருணிக்கிறாள்?
தலைவன் சென்ற பாலை நில வருணனையை இங்கே கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது. தலைவன்
சென்ற பாலை நிலத்தில் வெய்யில்
மிகுந்துள்ளது. ஓமை மரக்காடுகள் அங்கே இருந்தும் வெய்யிலின் கடுமை குறையாது
மிகுந்திருப்பதாகத் தலைவி சொல்கிறாள். சரி. ஓமை மரம் எவ்வாறிருப்பதாகத் தலைவி வருணிக்கிறாள்?
ஒமை மரத்தின் பட்டையில் உப்பு பூத்திருப்பதாக
தலைவி கூறுகிறாள். அந்த உப்பு
பூத்திருப்பது எவ்வாறிருப்பதாக வருணிக்கப்படுகிறது என்றால் சுட்ட தயிர் பானையில் மத்து
கடைந்ததால் திரண்ட வெண்ணைய் கட்டியாகாமல் சிதறி இருப்பதுபோல சிதறுண்டு உப்பு
ஆங்காங்கே மரப்பட்டையில் பூத்திருப்பதாக வருணிக்கப்படுகிறது. மண்ணால் சுடப்பட்டு
உறுதியாகவுள்ள தயிர்பானையில் மத்து கடைந்தும் வெண்ணைய் திரளவில்லை. தலைவனோடு
கூடியும் முழுமையை எட்டவில்லை. வெற்றி அதாவது புளிப்புச்சுவையை அடையும் வெற்றி
கனவாக மறைந்துபோய்விடுகிறது.
கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள மரத்தில் உப்பு படர்ந்திருப்பது
பொருத்தமாகவே உள்ளது. மிகக்கூர்ந்து கவனிக்கப்பட்டதால் அமைந்துள்ள சிறந்ததொரு வருணனையாக இதைக் கருதி புலவனின் படைப்புத்திறனை
பலவாறு பாராட்டலாம். தலைவன் பிரிந்த நிலையில் துயருற்ற தலைவி தலைவனை
வலிமையற்றவனாகக் கூறிவிட்டு, மத்து கடைந்தும் திரளாது சிதறுண்டிருக்கும் வெண்ணைய்
போல உப்பு ஆங்காங்கே மரத்தின் மேல் பூத்திருக்கிறது என்று உவமை காட்டுவது
கவிதையின் கருப்பொருளோடு அதற்குள்ள பொருத்தப்பாட்டினை புலவன் மிக நுண்மையாக
படைத்திருப்பது பாராட்டிற்குரியதாகும்.
தன்னை நேற்று பாராட்டிய தலைவனை வலிமையற்றவனாக தலைவி சுட்டுவது ஏன்? விரும்பியவர்க்கு விரும்பியதை
கொடுத்து அவர் விருப்பத்தை தணிக்கும் வலிமை தலைவனுக்கு இல்லத்து வாழ்வில் அதாவது குடும்ப
வாழ்க்கையில் இல்லை என்ற செய்தியை தலைவி தலைவனின் வருணனையில் சாடையாகக் குறிப்பிடுகிறாள்.
இதை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் உப்பு படர்ந்திருப்பதற்கு சுட்டும்
உவமையில் கரந்து பொருள் உணர்த்தும் முறையில் சொல்கிறாள். சுட்ட
மண்ணால் ஆன பானையில் மத்து கடைந்தும் வெண்னை திரளவில்லை என்ற செய்தி தலைவனின் காதல்
செயல்பாட்டைக் குறிப்பதாகக் கருதினால் தலைவனின் இயலாமையைச் சொல்வதாகக் கருதலாம்.
அதனால்தான் தலைவி தலைவனை வலிமையற்றவன் என்று வருணிப்பதாக உணரலாம்.
இந்த இயலாமை காரணமாகவே தலைவன் பிரிந்தான் என்றால் தலைவன் பிரிவிற்கு
ஒதல், பொருள்வயின் பிரிதல் ஆகிய மரபு சார்ந்த காரணங்களோடு இன்னொரு புதியதொரு காரணம்
இங்கே சுட்டப்படுவதை அறியலாம். தலைவியின் உள்ளக்கிடக்கையை தணியாத ஏக்கத்தை மிகச் சிறப்பாக நற்றிணை பாலைப்பாடல் கரந்து பொருள்
உணர்த்தும் உத்தி முறையில் சுட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது.
உவமை, உள்ளுறை, இறைச்சி, சிலேடை போன்ற பல கவிதை உத்திகள்
சங்க காலப்பாடல்களில் இடம்பெற்றாலும் அகப்படல்களில் கரந்து பொருள் உணர்த்தும்
உத்திமுறையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது. சிறுகதையில் அதிகம்
பயனாகும் வருணனை உத்தி முறையிலும், கதை நிகழ்வுக்கு ஏற்ப கதைக்களத்தையும் கதைமாந்தர் தோற்றப்பொலிவையும்
அமைத்து காட்சிப்படுத்தப்படும் நாடக உத்தி முறையிலும் சங்க அகப்பாடல்களை ஆராய்ந்தால் கரந்து பொருள் உணர்த்தும்
முறையால் பல புதிய செய்திகள் பாடல்களில் பொதிந்திருப்பதை அறியலாம்.
-------------------------------
-------------------------------
பயன்பட்ட நூல்களும் கட்டுரைகளும்:
1.
ஆரோக்கியநாதன், எஸ். மொழியியல்
நோக்கில் நாடனொடு நட்பு,
(கட்டுரை), மொழியியல் நோக்கில்
தொல்காப்பிய, சங்க இலக்கிய
ஆய்வுகள், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை-113. 2009.
2.
வேங்கடராமன்,H. வித்துவான், நற்றிணை: மூலமும் உரையும்,
உ.வே.சா. நூல் நிலையம், சென்னை-90. 1989.
3.
Ramanujan,
A.K., Poems of Love and War,
Oxford University Press, Madras, 1985.
4. Subramanian,A.V., Narrinai (An Anthology of Amour),
Dept. of Tamil Development –Culture, Govt. of Tamil Nadu,
1989.

No comments:
Post a Comment