Sunday, June 23, 2013
An article on '-um' clitc particle
1
இடைச்சொல் : உம் முனைவா் எஸ். ஆரோக்கியநாதன்,
மேனாள் புலமுதன்மையா் (ஓய்வு)
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சேரி – 605 014. (Dec. 2012)
தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் ஏழாவது இயலாக வினையியலை அடுத்தும் உரியியலுக்கு முன்னரும் இடையியல் அமைந்துள்ளது. தொல்காப்பியர் பல்வேறு இடங்களில் இடையியல் பற்றி விளக்கம் அளித்துள்ளார். பெயர்ச்சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வருவன எனும் பொருளில் “பெயரோடும் வினையோடும் நடைபெற்று இயலும்” எனக் கூறியுள்ளார். இடைச்சொற்கள் எவ்வித பொருளையும் சுட்டாது என்றும் குறிப்பிடுகிறார். ஒரு தொடரில் இடம்பெறும் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து அதற்குரிய இலக்கணக் குறிப்பைப் பெற்று வரும் என்பதால் இடைச்சொற்கள் தமக்கென தனி இயல்பு கொண்டவையல்ல என்ற பொருளில் “தமக்கு இயல்பு இலவே” எனச் சுட்டியுள்ளார்.
சொல்லெனப்படுவது பெயரும் வினையும் ஆகும் என்று கூறிவிட்டு இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அவற்றுவழி தோன்றும் எனக் குறிப்பிடுவதால் பெயரும் வினையும் முதல் நிலையாகவும் இடையும் உரியும் இரண்டாம் நிலையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. அவ்வாறாயின் “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கருத்தின் அடிப்படையில் சொல்லாகக் கருதப்படும் இடைச்சொல்லும் பொருள் குறிக்கும் எனக் கருதலாம். ஏனெனில் காலம் காட்டும் இடைநிலைகளும் பால் காட்டும் விகுதிகளும் இடைச்சொற்களாகக் கருதப்படுவதால் இடைச்சொற்கள் பொருள் உணர்த்துவன என்று அறியலாம். தொல்காப்பியரே “புணரியல் நிலையிடை பொருள் நிலைக்கு உதவுவன” என்று குறிப்பிடுவதால் இடைச்சொற்கள் பொருள் குறிப்பு கொண்டன என்பது உறுதியாகிறது. அதே சமயம் இசைநிறை, அசைநிலைச் சொற்கள் பொருள் உணர்த்தா இடைச்சொற்களாக வருவதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் இடைச்சொற்களை ஏழாக வகைப்படுத்தி உள்ளார். புணரியலில் வரும் சாரியை, காலம் காட்டும் இடைநிலைகள் பால்காட்டும் விகுதிகள், அசைநிலைச் சொற்கள், இசைநிறைச் சொற்கள், குறிப்புச் சொற்கள், உவம உருபுகள் ஆகியன இடைச்சொற்களாகும்.
2
தொல்காப்பியா் இடைச்சொற்களின் வகைகளை வரிசைப்படுத்தியுள்ள நிரல்முறைக்கு சேனாவரையர் காரணம் கூறுவார். ”புணர்ச்சி மருங்கில் இடம்பெறக்கூடிய இடைநிலைகளை எழுத்ததிகாரப் புணரியலிலும் வினைசெய் மருங்கில் காலங்காட்டுதலோடு வரக்கூடிய இடைச்சொற்களை வினையியலிலும் வேற்றுமைப் பொருள்வயின் வரும் உருபாகும் இடைச்சொற்கள் வேற்றுமை இயலிலும் தொல்காப்பியர் கூறியுள்ளார். அதனால்தான் சேனாவரையர் இடையியலுக்கு முன்னர் அம்மூன்றும் அமைந்திருப்பதனால் இடைச்சொல் ஏழனுள்ளும் முதல் நின்ற மூன்றும் மேலே உணர்த்தப்பட்டமையால் முன்வைத்தார் எனக் குறிக்கின்றார். உவமப்பொருளில் வரக்கூடிய இடைச்சொற்களை இனிவரும் பொருளதிகார உவமையியலுள் கூறப்போவதால் ஒப்பில் வழியால் பொருள் செய்குந முன்னர் உணா்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார் என்று சேனாவரையர் கூறுகிறார். அசைநிலை, இசைநிறை தத்தம் குறிப்பில் பொருள் செய்குந என்ற 3 இடைச்சொற்களையும் இவ்வியலுள் கூறப்போவதால் இடை வைத்தார் என்று விளக்குவார். இவ்வாறு இடையியல் வகைகளின் வைப்பு முறைக்கு உரையாசிரியரின் விளக்கம் சிந்திக்கத்தக்கது (வி. பழனியப்பன், ப.31).
இவற்றில் அசைநிலைச் சொற்களும் இசைநிறைச் சொற்களும் பொருளற்று பெயர்-வினை இவற்றிற்கு துணையாய் வருவனவாகும். தொல்காப்பியரின் “எல்லே இலக்கம்” எனும் நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் தரும் மாறுபட்ட உரை விளக்கங்கள் இடைச்சொல்லுக்குரிய இலக்கணத்தைப் புலப்படுத்துகிறது. “எல் என்பது உரிச்சொல் நேர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையால் இடைச்சொல் என்று கோடும்” என்று சேனாவரையர் குறிப்பிடுகிறார். “எல்வளை மகளிர்” (புறம் 24) எனும் தொடரில் உள்ள எல் எனும் சொல் வளைகள் அசைந்து இலங்கும் நிலையைச் சுட்டுவதால் இது இடைச்சொல் எனக் குறிப்பாகக் கருதப்படுகிறது. எல் எனும் சொல் ஞாயிற்றைக் குறிக்கும் போது பெயர்ச்சொல்லாக வருகிறது. “எல்லினன் பெரிது , எல்லிற்று போது” எனும் தொடர்களில் ஒளிர்தலைக் குறிப்பிடுவதால் வினைச்சொல்லாகக் கருதப்படுகிறது. “எல் ஒளி மதியம்” எனும் தொடரில் எல் பண்பைக் குறிப்பதால் உரிச்சொல்லாக அமைகிறது என பாலசுந்தரம் (பக். 101 – 103) குறிப்பிடுகிறார். அதாவது ஒரு சொல் நேரடியாக பொருள் கொள்ளாது தனக்கென தனி இலக்கணத் தகுதியும் பெறாது, பெயரோடு (அல்லது வினையோடு) சார்ந்து வரும் போது இடைச்சொல்லாகக் கருதப்படுகிறது என அறியலாம். பெயரையும் வினையையும் சார்ந்து வரும் என்பதால் பெயர்சொல்லிற்கு முன், பின் மற்றும் இடையில் வரும். ஆனால் வினைத்தொடரில் பெரும்பாரும் வினைச்சொல்லுக்குப் பின்னால் இடம்பெறும்.
3
“முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்
தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும்
அன்னவை யெல்லாம் உரிய வென்ப”
எனும் நூற்பாவில் தொல்காப்பியர் இடைச்சொற்களுக்குரிய பண்புகளைக் குறிப்பிடுகிறார். இடைச்சொற்கள் பெயர் வினையையொட்டி அடுத்து முன்னும் பின்னும் இடையிலும் இடம்பெறும் பாங்கினை அடுத்து இடைச்சொற்கள் சிலவற்றின் இறுதி திரிந்து வரும் என்றும் இடைச்சொற்கள் இரண்டு சேர்ந்து வரலாம் என்றும் குறிப்பிடுகிறார். “கேண்மியா” எனும் தொடரில் இடைச்சொல்(மியா) முன்னடுத்து வந்தது என்றும் “ஓ ஓ இனிதே” என்பதில் இடைச்சொல் பின்னடுத்து வந்தது என்றும் உரையாசிரியர் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். முன்னோர் மொழியை பொன்னே போல் போற்றும் போக்கில் இது விரிவாக விளக்கப்படாமல் அமைந்துள்ளது. தொடரமைப்பில் ”மியா” கேள் எனும் வினைச்சொல்லுக்குப் பின்னும் ஓ எனும் இடைச்சொல் இனிது எனும் வினைமுற்றுக்கு முன்னும் அமைந்திருப்பதாகக் கருதப்படும். இதனால் உரையாசிரியர்கள் சுட்டும் முன்னடுத்தது பின்னடுத்தது ஆகியவற்றுக்குரிய விளக்கங்கள் தெளிவுபடவில்லை. “முன் என்பது இலக்கண நெறியில் வலப்பக்கத்தைக் குறிக்கும். நாம் இடமிருந்து வலம் நோக்கி எழுதுகிறோம். ஆதலின் முன்னோக்கிச் செல்லும் வலம் முன் எனவும் தொடக்கமாகிய இடம் பின்” எனவும் உரைவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. (பாலசுந்தரம், ப.41).
“கேண்மியா” எனும் தொடரில் “மியா” எனும் இடைச்சொல் “கேள்” எனும் வினைச்சொல்லை முன்னடுத்து வந்ததாக மற்றொரு உரைவிளக்கம் காணப்படுவது தொடரமைப்பில் வினையும் இடையும் இடம்பெறும் நிரல் வரிசைக்குப் பொருத்தமாகும். இடைச்சொல் ஒரு முழு வாக்கியத்தில் பொதுவாக ஒரு முறை இடம்பெறும். ஒருசில இடைச்சொற்கள் ஒரு முறைக்கு மேலும் இடம்பெறுவதுண்டு. சான்றாக உம், எனும் இடைச்சொல் இராமனும் சீதையும் வந்தார்கள், அவன் பாடவும் ஆடவும் செய்தான் எனும் வாக்கியங்களில் “உம்” எனும் இடைச்சொல் ஒரே மாதிரியான இலக்கணக் குறிப்புடைய இரு சொற்களுடனும் வந்துள்ளது. இருமுறைக்கு மேலும் இவ்வாறு வர வாய்ப்புண்டு. ஒரே சொல்லோடு ஒன்றுக்கு மேற்பட்ட இடைச்சொற்கள் வரக்கூடும். “அவன் தானே வந்தான்” எனும் வாக்கியத்தில் தான், ஏ எனும் இரு இடைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. “அவன் தானே வந்தான்” எனவும் கூறமுடியும் என்பதால் தான், ஏ போன்ற இடைச்சொற்களின் நிரல் வரிசை பொருண்மை நிலைக்கேற்ப மாறுபடுவதுண்டு. சில சமயங்களில் ஒரு இடைச்சொல்லே ஒரு சொல்லோடு இருமுறை வருவது போல் தோன்றும். சான்றாக, “அங்கேயே இருந்தான்”, தான் தான் வருவேன் என்று சொன்னான்” ஆகிய வாக்கியங்களில் ஏ, தான் ஆகிய இடைச்சொற்கள் இரு முறை வந்துள்ளது போல் தோன்றினும் அவை ஒரு சொல் பல பொருள் குறித்த சொல்லாக, வெவ்வேறு இலக்கணக் குறிப்புகளில் அமைந்தனவாகும்.
4
ஒரு இடைச்சொல் ஒரு சொல்லோடு ஒரு வாக்கியத்தில் ஒரு முறை தான் வரும் எனும் விதி தமிழிலக்கண மரபில் மீறப்படுவதில்லை. தொல்காப்பியர் ஏழு வகையாக இடைச்சொற்களை வகைப்படுத்தியுள்ளார். மேலும் தொல்காப்பியர் 42 இடைச்சொற்களைக் குறிப்பிட்டு அவை 32 பொருட்களை உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளதை இன்னாசி சுட்டிக்காட்டியுள்ளார். செய்யுள் வழக்கில் இடம்பெறும் இசைநிறை, அசைநிலைச் சொற்களைச் சுட்டும் தொல்காப்பியர் உரையாசிரியா்களால் பேச்சு வழக்கில் இடம்பெறும் ஆக, அகல் எனும் இடைச்சொற்களையும் குறிப்பிட்டுள்ளார். சில இடைச்சொற்களுக்கு அது உணர்த்தும் பொருளை வரிசைப்படுத்தி பொருண்மை நிலையில் விளக்கமளித்துள்ள தொல்காப்பியர், என்றா, ஏ போன்ற இடைச்சொற்கள் சொல்லிறுதியில் வரும் என்ற தொடரியல் குறிப்பையும் என்று, என ஆகிய இடைச்சொற்கள் எண்ணுப்பொருளில் சொல்தோறும் வரும் என்ற இலக்கணக் குறிப்பையும் பதிவு செய்துள்ளார். தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான இடைச்சொற்கள் செய்யுள் வழக்கிற்குரியதாக இருப்பதால் இன்றைய உரைநடையில் பல வழக்கிழந்து போயுள்ளன.
மேலும் பல இடைச்சொற்கள் தொல்காப்பியர் சுட்டும் இடச்சூழலையும் பொருள் நிலையையும் இழந்தும், பல இடைச்சொற்கள் புதிய முறையில் தோன்றியும் வந்துள்ளதைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் காலத்தில் பொருளற்றதாகக் கருதப்படும் இடைச்சொற்கள் சில தற்போது பொருள் சார்ந்தனவாக உள்ளன. சான்றாக, போலும் எனும் அசைநிலை இடைச்சொல்லைக் கூறலாம். தற்போதைய பேச்சுத் தமிழில் “அலர் நாளை வருகிறார் போலும்” எனும் வாக்கியத்தில் போலும் எனும் இடைச்சொல் கூற்றுரை விகுதியாக விளங்குகிறது. தொல்காப்பியர் “உம்” எனும் இடைச்சொல்லிற்கு எச்சம், சிறப்பு, எதிர்மறை, முற்று, திரிநிலை, ஆக்கம் என 8 பொருளைக் குறிப்பிட்டுள்ளார். உம் எனும் இடைச்சொல் பெயர், வினை, எண்ணுப்பெயர் ஆகிய சொற்களோடு தனித்தும் ஒரு வாக்கியத்தின் சொற்களோடும் மரபுத்தொடர்களொடும் இடம்பெறுகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் ஆக்கப்பொருள் உணர்த்தும் “உம்” எனும் இடைச்சொல் தற்காலத் தமிழுக்குப் பொருந்துமா என்பது ஐயமே. “ஆக்கம் உம்மையடுத்த சொற்பொருள் மேலாகும் நிலைமையைக் குறித்து வரும். வாழும் வாழ்வு, உண்ணும் ஊண் எனத் தொழிலினது ஆக்கம் குறித்து நின்றவாறு கண்டு கொள்க. இது பெயரெச்ச வினச்சொல் அன்றோவெனின் ஆம், அதற்கண் உம் இடைச்சொல் என்க” என்று தெய்வச்சிலையார் கூறுவதாக சிவலிங்கனார் இடையியல் குறித்த உரைவளத்தில் (ப.57) குறிப்பிட்டுள்ளார்.
5
“உண்ணும்” எனும் வினைத்தொடரில் உள்ள “உம்” என்பது பெயரெச்ச விகுதியாகும். ஏனைய இடைச்சொற்களைப் போன்று இதனைக் கருத இயலாது. “தெரிநிலை என்பது ஒரு பொருளை ஐயப்படுதலும், துணிதலும் இன்றி ஆராயும் நிலைமைக்கண் வருவது” எனக் கூறி, “நன்றும் அன்று ; தீதும் அன்று” எனும் வாக்கியத்தை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுவர். இன்றையச் சூழலில் இது தெரிநிலைப் பொருளில் வருவதாகக் கருத இயலாது. “உம்” எனும் இடைச்சொல் சிறப்புப் பொருளில் வருவதாக தொல்காப்பியர் குறிப்பிட, உரையாசிரியர்கள் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பது உயர்வு சிறப்பும்மை என்றும் “இவ்வூர்ப் பூசையும் (பூனையும்) புலால் தின்னாது” என்பது இழிவு சிறப்பு உம்மை என்றும் விளக்கமளித்துள்ளனர். உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பு என்பதெல்லாம் ஒரு சமூகத்தின் கருத்தாக்கத்தின் மேல் அமைந்ததாகும். யானைக்கு எப்போதும் அடி சறுக்காது என்ற கருத்தாக்கத்தினால்தான் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பதில் உள்ள உம்மை, உயர்வு சிறப்பும்மையாகக் கருதப்படுகிறது. “இந்த அவலத்தைக் கண்டால் பேயும் நடுங்கும்” எனும் பொழுது பேய் எதற்கும் நடுங்காது என்ற கருத்தாக்கத்தினால் பேயும் நடுங்கும் என்பதிலுள்ள உம்மையை உயர்வு சிறப்பு உம்மையாகக் கருதலாம் என்றாலும் சமூகத்தில் பேய் எனும் கருத்தாக்கம் எதிர்மறையாகக் கருதப்படுவதால் இவ்வாக்கியத்தில் இடம்பெறும் உம்மை இழிவு சிறப்பு உம்மையாகக் குறிப்பிடுவர்.
“உம்” எனும் இடைச்சொல்லானது சிறப்புப் பொருளில் உயர்வு குறித்ததா? இழிவு குறித்ததா? என்பது அது இடம்பெறும் சொல்லின் தன்மையைச் சார்ந்ததாகவே கருத வேண்டும். “சாத்தானும் வந்தான்” எனும் வாக்கியத்த உரையாசிரியர்கள், தொல்காப்பியர் சுட்டும் எச்சப்பொருளுக்கு சான்றாகக் குறிப்பிட்டுள்ளனர். எதற்கும் வராத சாத்தான் (இதற்கு ) வந்தான் என்று கருதினால் இது உயர்வு சிறப்புப் பொருளுக்கு உரியதாகவும், எதற்கும் வருகின்ற சாத்தான் (இதற்கும்) வந்தான் எனக் கருதினால் இழிவு சிறப்புக்கு உரியதாகவும் கருதலாம். ஆயினும் இவ்விரண்டு பொருண்மை நிலைகளையும் உள்ளடக்கிய மேற்கூறிய வாக்கியம் எச்சப்பொருளில் இடம்பெறுகிறது. சாத்தானும் வந்தான் எனும் பொழுது இன்னும் சிலரும் வந்தனர் என்ற பொருள் தொக்கி இருப்பதாகக் கருதும்போது இது எச்சநிலையாகும். ““அரசன் வருவதற்கும் உரியன்” எனும் வாக்கியத்தில் அரசன் வராமைக்கும் உரியன் என்ற எதிர்மறைப்பொருள் இருப்பதாக உரையாசிரியர்கள் சுட்டுவர். “அவள் வணங்குதற்கு உரியள்” எனும் வாக்கியம் “அவள் வணங்காமைக்கும் உரியள்” என்ற எதிர்மறைப்பொருளைத் தருவதைப்போல, “அவள் போற்றுதலுக்கும் உரியள்” என்ற எச்சப்பொருளையும் தரும். இவ்வாறு எதிர்மறைப்பொருளையும் உடன்படு பொருளோடு எச்சப்பொருளில் அடக்கலாம். எச்சம் எனும் இடைச்சொல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரு உட்கூறுகளோடு விளங்குவதாகக் கருதலாம்.
6
தொல்காப்பியர் குறிப்பிடும் உம் எனும் இடைச்சொல்லுக்குரிய 8 பொருளில் எச்சம், எண், முற்று, சிறப்பு ஆகியன இன்றைய தமிழ் வழக்கில் இடம்பெறுவதோடு வேறுபல பொருண்மை நிலையிலும் தொடரமைப்பிலும் உம் எனும் இடைச்சொல் விரிவடைந்திருப்பதைக் காணலாம். வீரமாமுனிவர் (பெஸ்கி) தம்முடைய செந்தமிழ் இலக்கண நூலில் சிறப்பு, ஐயம், எதிர்மறை, தெரிநிலை, ஆக்கம் ஆகியவற்றை உம் எனும் இடைச்சொல்லுக்குரிய பொருளாகக் குறிப்பிடவில்லை. ஆர்டன் (1948) எனும் இலக்கண ஆசிரியர், நிபந்தனை வாக்கியம் (Conditional), சலுகை வாக்கியம் (Concessive) ஆகியவற்றில் உம் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணுப்பெயர்களோடு உம் எனும் இடைச்சொல் இடம்பெறும்போது முற்றுப்பொருள் அமைகிறது. சான்றாக, “மூவேந்தரும்” எனும் சொல்லில் உள்ளது மூன்று வேந்தர்கள்; அம்மூன்று பேரும் என்ற முற்றுப்பொருளை “உம்” எனும் இடைச்சொல் சுட்டுகிறது. நான்கு பேரும் வந்தார்கள் எனும் பொழுது உள்ளது மொத்தம் நான்கு பேர். அந்த நான்கு பேரும் வந்தார்கள் என்று முற்று நிலையில் உம்மை பொருள்படும். எல்லா, எல்லார் எனும் பன்மைச்சொற்கள் பெயர்ச்சொற்களோடு இடம்பெறும்போது முற்றுப்பொருளில் “உம்” எனும் இடைச்சொல்லும் இடம்பெறும். சான்றாக, எல்லா வீடுகளையும் பார்த்தேன் எனும் வாக்கியத்தில் “உம்” முற்றுப்பொருளில் இடம்பெற்றுள்ளது. “வீடுகள் எல்லாவற்றையும் பார்த்தேன்” எனும்போதும் இப்பொருளில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் அஃறிணைப் பெயரோடு கள் எனும் பன்மை விகுதி உறழ்ச்சி நிலையில் இடம்பெறாது வரும்போது உம் எனும் இடைச்சொல் இடம்பெற்றால் அத்தொடரின் பொருள் மாறுபடுவதுண்டு. “எல்லா அறையையும் பெருக்கினாள்” எனும் வாக்கியத்திற்கும் “அறையை எல்லாம் பெருக்கினாள்” எனும் வாக்கியத்திற்கும் பொருள் வேறுபாடு உண்டு. எல்லா எனும் சொல் இடம்பெறும்போது “உம்” எனும் இடைச்சொல் கட்டாயம் வரவேண்டும்.
எங்கே, எப்போது. எப்படி, யார் போன்ற வினாச்சொற்களுடன் “உம்” எனும் இடைச்சொல் இடம்பெறுவதுண்டு. ஏன், என்ன எனும் வினாச்சொற்களோடு “உம்” எனும் இடைச்சொல் இடம்பெறுவதில்லை. எப்படி, எப்போது எனும் வினாச்சொற்களோடு “உம்” எனும் இடைச்சொல் இடம் பெற்று உடன்பாடு, எதிர்மறை வாக்கியங்கள் வரலாம். சான்றாக, எங்கேயும் போவேன், எங்கேயும் போகவில்லை, எப்படியும் கொடுத்து விடுவான், எப்படியும் கொடுக்க மாட்டான், யார் எனும் வினாச்சொல் யாரும் வரல எனும் எதிர்மறை வாக்கியத்தில் உம் உடன் இடம்பெறுகிறது. யாரும் வருவார்கள் என்ற உடன்பாடு வாக்கியத்தைவிட யாராவது வருவார்கள் என்பது இலக்கணப் பொருத்தமாகக் கருதப்படுகிறது.
7
எப்படி போவேன்? என்பது வினா வாக்கியம் எப்படியும் போவேன் என்பது உடன்பாட்டு வாக்கியம். இங்கு “உம்” எனும் இடைச்சொல் வினாப் பொருண்மையை இழக்க வைக்கிறது. பல மரபுத்தொடர்களில் இரு சொற்களுக்கிடையேயுள்ள இணக்கத்தைக் குறிக்க “உம்” எனும் இடைச்சொல் பயன்படுகிறது. சான்றாக, புத்தகமும் கையுமாக இருந்தான் எனும் வாக்கியத்தில் உள்ள மரபுத்தொடரில் “உம்” இருமுறை இடம்பெற்று இருப்பதைக் காணமுடிகிறது. அவ்வாறே வாயும் வயிறுமாக, குடியும் குடித்தனமுமாக, காதும் காதும் வைத்தாற்போல போன்ற மரபுத்தொடர்களில் “உம்” எனும் இடைச்சொல் இணக்கப் பொருளில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். போயும் போயும் எனும் மரபுத்தொடரில் வினாச்சொற்களோடு “உம்” இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். அதுபோன்றே தினம் எனும் சொல்லுடன் “உம்” எனும் இடைச்சொல் மீண்டும் மீண்டும் வருதல் என்ற பொருளில் தினம் எனும் சொல்லையொட்டி தினமும் என இடம்பெறுவதுண்டு. வினைச்சொற்களில் “உம்” எனும் இடைச்சொல் எண்ணுப்பொருளில் இடம்பெறலாம். அவன் ஆடவும் பாடவும் செய்தான் எனும் வாக்கியத்தில் எண்ணுப்பொருளில் “உம்” இடம்பெற்றுள்ளது.
பெயராலணையும் வினைச்சொல்லுடன் “உம்” எனும் இடைச்சொல் இடம்பெற்று பின்னர் அதே வினைச்சொல் முற்று நிலையில் வரும்போது அவ்வினை தொடா்பான எச்சப்பொருளை “உம்” எனும் இடைச்சொல் உணர்த்துவதாக அறியலாம். “நீங்கள் செய்கிறதையும் செய்து விட்டு இல்லை என்றா சொல்கிறீர்கள்” என்ற வாக்கியம் மேற்கூறிய கருத்துக்குச் சான்றாகும். செய்கிறதையும் செய்து விட்டு; சொல்கிறதையும் சொல்லி விட்டு போன்ற தொடர்களில் முதல் வினைச்சொல் வினையாலணையும் பெயராகவும், இரண்டாவது வினைச்சொல் இறந்தகால வினையாகவும் இடம்பெற்று வினை குறிக்கும் செயல்பாடு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துகிற பொருளில் இடம்பெற்றுகிறது.
தொல்காப்பியர் பண்பை உணா்த்தும் உரிச்சொல்லில் இருந்து இடைச்சொற்களை வேறுபடுத்தியுள்ளார். காலங்காட்டும் இடைநிலைகள் பால் காட்டும் விகுதிகள் ஆகியன நோ் பொருளில் எவ்விதப் பொருள் மாற்றமுமின்றி இடம்பெறுகின்றன. அசைநிலை, இசைநிறை போன்ற இடைச்சொற்கள் எவ்விதப் பொருளையும் உணா்த்தாது. “வற்று” போன்ற சாரியை பொருளில்லா இடைச்சொல்லாகும். மன்னே, மா, கொல் போன்ற இடைச்சொற்கள் பல்வேறு மெய்ப்பாடுகளைக் குறிப்பனவாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். விழைவுப் பொருளில் தில், கால செலவினை உணர்த்தும் “எற்று” போன்ற ஒரு நேர்பொருள் கொண்ட இடைச்சொற்களையும் தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார்.
8
உம், ஏ, ஓ ஆகிய இடைச்சொற்கள் பல்வேறு பொருள் குறித்தது வருவனவாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
”கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற் றியலா உணர்ந்தனர் கொளலே”
எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டு வரையறை செய்யப்படாத நிலையில் இன்னும் பலஇடைச்சொற்கள் இருக்கலாம் என்றும் அவற்றை தாம் கூறியுள்ள முறையையொட்டி பொருள் உணர்ந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இதனால் தொல்காப்பியர் இடைச்சொற்கள் இவைதாம் என முற்றாகக் குறிப்பிடா விட்டாலும் அவற்றிற்கான இலக்கணத்தைத் தெளிவுபடுத்தி அவற்றைக் கண்டறிந்து பொருள் உணரும் வாய்ப்பாட்டினை இடையியலில் பதிவு செய்துள்ளார் என்பது சிறப்பாகும்.
ஆய்வுக்கு பயன்பட்ட நூல்கள்
1. ஆரோக்கியநாதன், எஸ்., தொல்காப்பிய மொழியியல்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2009.
2. சிவலிங்கனார்,ஆ., தொல்காப்பியம் – சொல்லதிகாரம் இடையியல் (உரைவளம்), உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1986.
3. பழனியப்பன்.வி., புலமைமிகு சேனாவரையர், சிந்து பதிப்பகம்,
சிதம்பரம், 2002.
4. பாலசுந்தரம்,ச., தொல்காப்பியம் – சொல்லதிகாரம் ஆராய்ச்சி : காண்டிகையுரை, தாமரை வெளியீட்டகம், தஞ்சாT+h;, 1988.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment