Thursday, April 22, 2010

வண்ணச் சினைச் சொல் : உரை ஒப்புமை

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் தொடரியல் குறித்த இலக்கணக் கலைச்சொல்லாக ‘வண்ணச் சினைச்சொல்’ இடம்பெறுகிறது. ‘அடை, சினை, முதல்’ என்னும் இலக்கணக் குறிப்பு கொண்ட சொற்கள் வரும் நிரல் முறை ‘வண்ணச் சினைச்சொல்’ எனும் வாய்ப்பாடாகக் கூறப்பட்டுள்ளது.

‘அடை சினை முதல் என முறை மூன்று மயங்காமை
நடைபெற்றியலும் வண்ணச் சினைச் சொல்’

எனும் தொல்காப்பியரது கிளிவியாக்க நூற்பாவிற்கு இளம்பூரணர், சேனாவரையர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோரது உரைகள் ஒப்பு நோக்கில் இங்கு ஆராயப்படுகிறது. காலத்தால் முந்தைய இளம்பூரணாரின் உரை இந்நூற்பாவிற்கு விளக்கம் அளிப்பதுடன் புறநடையினைச் சுட்டிக்காட்டி சான்றுகள் தந்து விளக்குகிறது. இவரையொட்டியே கல்லாடனாரின் உரையும் அமைகிறது. சேனாவரையரது உரையும் தெய்வச் சிலையாரின் உரையும் மிக நுண்மையான மொழிக் கோட்பாட்டின் இரு முனைகளைப் பற்றி நிற்பதாகத் தெரிகிறது.

அடை, சினை, முதல் ஆகிய சொற்கள் வரும் நிரல்முறையினைக் கூறும் இந்நூற்பா ‘மரபு வழுக் காத்தலை நுதலிற்று’ என தெய்வச்சிலையாரும், ‘வழக்கு பொருந்தி நடக்கும்’ எனச் சேனாவரையாரும், ‘வழக்கு பெற்று நடக்கும்’ எனக் கல்லாடனாரும், இதுவும் ‘ஒரு சொல்லுதல் வன்மை. உணர்த்துதல் நுதலிற்று’ என இளம்பூரணரும் குறிப்பிடுகின்றனர். இதனால் வண்ணச் சினைச் சொல்லுக்கான இலக்கணம் ‘மரபு காத்தலை’ அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது எனலாம்.
இதனைக் கீழ்க்காணும் வரைபடங்கள் விளக்கும்.

வரைபடம்: எண்.1

வண்ணச் சினைச் சொல்
அடை சினை முதல்


ஆனால் அடை, சினை, முதல் எனும் நிரல் முறை மீறியும் மாறியும் வழங்கப்படுவது உணர்ந்து அவற்றை மயங்கி வருவதாக உரையாசிரியர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர். ‘மயங்கிக் கூறுவன கண்டென்றே இவ்விலக்கணம் எழுந்தது, ‘எனும் கல்லாடனாரின் குறிப்பு இங்குக் கவனிக்கத் தக்கது. ‘வடிவ முதலாய பண்பும் அடை வருமிடத்தில் கொள்ளப்படும்’ என்பதால் வண்ணச் சொல்லுக்குப் பதிலாக வடிவச் சொல் வரலாம் எனும் போது வடிவு, சினை, முதல் என இலக்கணக் குறி;ப்புக் கொண்ட சொற்கள் முறை மீறி அமைகிறது. சான்றாக: ‘பெருந்தலைச் சாத்தன்’.

வரைபடம்: எண்.2

பெரும் தலைச் சாத்தன்

‘அடை சினை முதல் என வரும் மூன்றும் என்னாது முறை’ என்றதால் ‘இரு குணம் அடுக்கி முதலொடு வருதலும் இருகுணம் அடுக்கி சினையொடு வருதலும் உண்டு’ என இளம்பூரணர் கூறுகிறார். முறை என்பது வாக்கியத்தில் சொற்கள் வருகை தரும் முறையினைக் குறிக்கும். ‘மூன்று எனாது முறை’ என்பது எவ்வாறு இளம்பூரணருக்கு ‘மயங்கி வரலாம்’ என பொருள்படுகிறது என்று விளங்கவில்லை. ‘மூன்று’ என்று தனித்துக் கூறாது ‘முறை மூன்று’ என்றே நூற்பா சுட்டுகிறது. மயங்கி வருவதை விளக்க மூல நூலின் நூற்பாவில் பற்றுக் கோட்டினைத் தேடியதன் விளைவாக இதனைக் கருதலாம். மேலும் மயங்குதல் என்பதை இரு குணம் அடுக்கிச் சினையிலும் முதல் சொல்லிலும் வருவதாகக்; கருதி ‘இளம் பெருங்கூத்தன்’ எனும் தொடரை இளம்பூரணர் விளக்குகிறார்.

வரைபடம் : எண்.3

இளம் பெரும் கூத்தன்


இது இருகுணம் முதலொடு அடுக்கி வரும் தொடராகும். இதில் கூத்தன் என்ற பெயரை நோக்கியே ‘இளம்’ எனும் சொல் நின்றது என்கிறார். பொருண்மை நிலையில் இளம் எனும் சொல்லின் பொருள் கூத்தன் எனும் சொல்லின் பொருளை அவாவி நிற்றலைக் குறிப்பிட்டு வழக்கினுள் மயங்காது செய்யுளில் மயங்கும் என்கிறார். அவ்வாறாயின் வழக்கினுள் காணப்பெறும் ‘இளம் பெருங் கூத்தன்’ என்பதில் ‘வண்ணச் சினைச்சொல்’ வாய்ப்பாடு மாறவில்லை. என்று கருதப்படும். பொருள் கொள்ளும் முறையில் அடை சினையொடு பொருந்த பின் சினை முதல் கொண்டு முடிகிற முறை மாறி முதலொடு இருகுணம் (இளம், பெரும்) அடுக்கி வருகிறது. இங்கு ‘இளமை, பெருமை’ ஆகிய இரண்டும் கூத்தன் எனும் முதல் சொல்லோடு காணும்போது சினைச் சொற்களாகக் கருத முடியாத அடைச் சொற்களாக உள்ளன. இதனால் இங்கு ‘வண்ணச் சினைச்சொல் வாய்ப்பாடு மீறப்படுகிறது. இவ்வாறு பொருள்; கோடலுக்கான வரிசை முறை மாறுபடலாம் என்பது தெளிவாகிறது.

முறை மாறி மயங்கி வருவதற்குச் சேனாவரையர்; ‘செஞ்செவி சேவல்’ ‘வல்வாய்க் காக்கை’ எனும் இரு தொடர்கள் முறையே ‘செவிசெஞ்சேவல்’, வாய்வன் காக்கை’, என வருவதைக் குறிப்பிடுகிறார். இங்குச் ‘செவி செஞ்சேவல்’ எனும் தொடரில் ‘செம்’ எனும் அடை ‘சேவல்’ எனும் முதலோடும் இயைபுடையது என்கிறார். இதற்குக் காரணம்; ‘செம்’ எனும் அடை சினையோடு இயைபுடையது. அத்துடன் செவி எனும் சினை, சேவல் எனும் முதலொடு இயைபுடையது. அதனால் ‘செம்’ எனும் அடை சினையோடு இயைபுடைய முதலோடும் இயைபுடையதாகிறது என விளக்குகிறார். இது சொற்களின் பொருள் அவாவி நிற்கும் பாங்கினையொட்டிய விளக்கமாகும்.


வரைபடம்: எண்.4

செவி செஞ் சேவல்


(செம் எனும் அடை சேவல் எனும் முதலுடன் இயைபுடையது)

வரைபடம்: எண்.5
செஞ் செவி சேவல்

(செம் எனும் அடை சினை மேல் ஏறி சேவல் எனும் முதலொடு முடியும்)

வரைபடம்: எண்.6

வழக்கு செய்யுள்
செஞ் செவி சேவல் செவி செஞ் சேவல்




செய்யுள் வழக்கில்; ‘செவி செஞ்சேவல்’ என மயங்கி வருதல் உண்டு எனினும் அதனை, செஞ் செவி சேவல் எனும் தொடர்போல (வரைபடம்: எண்.6) பொருள் கொள்ள வேண்டும் என உரையாசிரியர்கள் குறிப்பிடுவது இங்கு நினைவு கொள்ளத் தக்கது. வழக்கில் ‘செஞ் செவி சேவல்’ முறை மயங்கி வராது என்பதாம்.

குரங்கு இனத்தில் கருங்குரங்கும் உண்டு@ செங்குரங்கும் உண்டு. அதனால் குரங்கின் செவி கருப்பாக இருக்கவும், சிவப்பாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கருதினால், ‘செஞ்செவி கருங்குரங்கு, கருஞ்செவி செங்குரங்கு’ என வரும் தொடர்கள் சினைக்கும் முதலுக்கும் இயைபின்மையைத் தெளிவுபடுத்தும். அதனால் ‘செஞ்செவி குரங்கு’ எனும் தொடரும் ‘செவி செங்குரங்கு’ எனும் தொடரும் ஒன்றாகாது. ‘செஞ்செவி குரங்கு’ எனும் தொடரில் குரங்கின் செவி சிவந்தது எனக் கூறலாம். ஆனால் குரங்கு சிவந்ததாகக் கூற இயலாது. அது போன்றே ‘செவி செங்குரங்கு’ எனும் தொடரில் குரங்கு சிவந்தது. ஆனால் செவி சிவந்ததாகக் கூற இயலாது. இதனைக் கீழ்வரும் வரைபடம்(7)இல் உள்ள (ஆ), (இ) எனும் பகுதி விளக்கும்.

வரைபடம்: எண்.7

(அ) கருஞ் செவி கருங் குரங்கு


(ஆ) செஞ் செவி (கருங்) குரங்கு செஞ் செவி குரங்கு


(இ) (கருஞ்); செவி செங் குரங்கு செவி செங் குரங்கு


(ஈ) செஞ் செவி செங் குரங்கு


ஆகையால் ‘செவி செஞ்சேவல்’ எனும் தொடரில் ‘சினைமுதல் இயைபு’ இத்தொடருக்கு மட்டுமே உரியதாகும். அதனால் அடை முதலொடும் இயைபு கொண்டு இங்கு மயங்கி வருவது இத்தொடருக்கு மட்டுமே ஏற்புடையதாகலின் சேனாவரையரின் விளக்கம் ஒருபக்கச் சார்புடையதாகக் கருதப்படும். ஆனால் சொற்களின் வரிசை முறை மாறும்போது அவற்றின் ‘பொருள்கோடல்’ முறையும் அதற்கேற்ப மாறுகிறது என்பதைச் சேனாவரையர் ஏற்றுக் கொண்டு ‘செவி செஞ்சேவல்’ எனும் தொடரை விளக்க முற்பட்டுள்ளார் என்பதை இதன்வழி அறியலாம்.

தெய்வச்சிலையார் ‘வண்ணச் சினைச்சொல்’ இலக்கணம் ‘மரபு வழுக்காத்தலை நுதலிற்று’ என்றும், ‘அடையும், அதன்பின் சினையும் அதன்பின் முதலுமாகவும் முறை மயங்காது மரபு கொண்டு வரும்’ என்றும் உறுதிப்படக் கூறுகிறார். ‘வந்தது கொண்டு வராதது முடித்தல் எனும் உத்தியால் வடிவு, முதலாயப் பண்பும் அடை வருமிடத்தில் கொள்ளப்படும்’ எனக்கூறி ‘சிறுகண் யானை’ எனும் தொடரைச் சான்று காட்டுகிறார். அத்துடன் சினையில் குணம் இரண்டு அடுக்கி வருவதையும் ஏற்று ‘கருநெடுங் கூந்தற் காரிகை’ எனும் தொடரினைக் குறிப்பிடுகிறார்.

வரைபடம்: எண்.8
கரு நெடுங் கூந்தற் காரிகை



‘செங்கால் நாரை’ எனும் தொடரில் ‘வண்ணம் சினை மேல் ஏறி முதலொடு முடிந்தது’ என தெய்வச்சிலையார் குறிப்பிடுகிறார்.

வரைபடம் : எண்.9

செங் கால் நாரை


இவ்விளக்கம் ‘வெண்கோட்டு யானை’ எனும் தொடருக்கும் பொருந்தும். ஆனால் ‘கருங்கோட்டு யானை’ எனும் தொடரில் கருமை யானையின் மேற் செல்லாது கோட்டின் மேல் செல்லுவதால் ‘இம்முறை நடைபெறாதது ஆயிற்று’ எனச் தெய்வச் சிலையார் முறை மயங்கி வருவதை மறுக்கிறார். அத்துடன் ‘கருங்கோட்டுயானை’ எனும் தொடர் ‘கோட்டு கரும் யானை’ என்று இடம்பெறாது என்பதால், ‘கருங்கோட்டு யானை’ முறை மயங்கி வருவதாகக் கருதப்படும். இதனைக் கீழ் உள்ள வரைபடம் விளக்கும்.

வரைபடம்: எண்.10

(அ) வெண் கோட்டு யானை (ஆ) கருங் கோட்டு யானை


அதுபோன்றே ‘பெருந்தலை புல்லார் நல்லார்’ எனும் தொடரில் பெருந்தலை என்பது ‘புல்லொடு சார்ந்து வருதலின், சொல்லுவான் குறிப்பு வேறாயினும்; அதன்மேல் சொல்லாதாயிற்று’ என விளக்குகிறார். இதனால் தொடரின் அமைப்பு வரிசை நிரல் முறையையொட்டியே ‘பொருள் கோடல்’ அமைய வேண்டும் என மேற்கூறிய இவ்விரு சான்றுகள் வழி தெய்வச்சிலையார் வலியுறுத்துவதாகக் கருதலாம். அதன் பொருட்டே ‘செவி செஞ்சேவல்’ என்பது மொழிமாறி வந்ததாகக் கருதி சேனாவரையரால் மரபு வழு’ எனத் தள்ளப்படுகிறது. அத்துடன் ஒரு பொருள் (சினை) மேல் அடையிரண்டு வருதலை ‘கருந் நெடுங் கூந்தல் காரிகை’ எனும் தொடர் வழி விளக்கும் தெய்வச்சிலையார், ‘பெருந்தலைச் சாத்தன்’ எனும் தொடர் போன்று முதலொடு பண்பு இரண்டு அடுக்கி வருதல் அவரது கருத்தில் இம்முறை ‘நடைபெறாததாயிற்று’. ‘வந்தது கொண்டு வராதது முடித்தல்’ என்பது வண்ணச் சொல்லுக்குப் பதிலாக வடிவச் சொல் வருவது மட்டுமே ஏற்புடையதாகிறது. ஆனால் அடையாக வரும் சொல் சினைமேல் ஏறாது முதலொடு முடிதல் மேற்கூறிய உத்தியில் பொருந்தாமல் தெய்வச்சிலையார் கருத்தில் ‘இம்முறை நடைபெறாததாக’ விளக்கப்படுகிறது. ‘சினையிலும் பண்பு இரண்டு அடுக்கி வரலாம் முதலோடும் பண்பு இரண்டு அடுக்கி வரலாம்’ எனும் சேனாவரையரின் கருத்துக்கு தெய்வச்சிலையாரின் கருத்து மாறுபட்டதாகும். இளம்பூரணரையொட்டியே சேனாவரையரின் விளக்கம் அமைந்திருக்கிறது. சினையில் பண்பு இரண்டு அடுக்கி வருவதை ஏற்கும் தெய்வச்சிலையார் முதலோடு பண்பு இரண்டு அடுக்கி வருவதை மறுக்கிறார். தெய்வச்சிலையாரைப் போன்றே கல்லாடனாரும் முதலோடு பண்பு

அடுக்கி வரும் ‘இளம்பெருங்கூத்தன்’ எனும் தொடர் மரபின்மையில் அமைந்ததாகக் கருதுகிறார்.

ஒன்றிற்கு மேற்பட்ட ‘அடை, சினை’ எனும் பெயரடைகளைக் கொண்டு ஒரு முதல் சொல் (பெயர்ச்சொல்) வருவதை இளம்பூரணர் ‘பெருந்தோட் சிறு மருங்குற் பேரமர்க்கட் பேதை’ எனும் தொடர்வழிச் சான்று காட்டி செய்யுளுள் மயங்கி வருவதாக மட்டுமே குறிப்பிடுகிறார். சேனாவரையர் இதனை மயக்கமின்றி வருவதாகக் கூறி, ‘பெருந்தோட் சிறு நுசுப்பின் பேரமர்க்கட் பேதை’ எனும் தொடர்வழி விளக்குகிறார். மூன்றாம் வழி பிற சொல்லெடுத்து ‘பேதை’ எனும் முதற்சொல கிடந்தனவே படுதலின் மயக்கமின்மை என்று கூறி ‘அவர்க்கு (இளம்பூரணருக்கு) அது கருத்தன்று’ என விளக்குகிறார். அத்துடன் ‘பெருந்தோள், சிறு நுசுப்பின், பேரமர்க்கண் எனும் மூன்று பெயரடைகளையும் உம்மைத் தொகையால் இணைத்து ‘பேதை’ எனும் பெயர்சொல்லுடன் வேற்றுமைத் தொகைபட ஒரு தொக்கு எனக் கருதினாலும் இம்முறை மயக்கமின்மையாகவே அமையும் எனச் சேனாவரையர் விளக்குகிறார்.


அதாவது ‘பேர், அமர்’ எனும் இருகுணம் அடுக்கி ‘கண்’ எனும் சினை மேல் ஏறி ‘பேதை’ எனும் முதல் (சொல்) கொண்டு முடிவதால் இது முதலாம் வழி மயக்கமின்றி அமைந்ததாகும். பின்னர் இரண்டாம் வழி ‘பேரமர்கட் பேதை’ எனும் தொடர் ஒட்டு மொத்தமாக ஒரு முதற்சொல்லாகக் கருதப்படுகிறது. இம்முதல் சொல் ‘சிறு’ எனும் அடை கொண்ட ‘நுசுப்பின்’ எனும் சினை கொண்டு முடிவதாக அமைகிறது. அதற்குபின் மூன்றாம் நிலையில் ‘பெருமை’ எனும் அடை ‘தோள்’ எனும் சினையுடன் சேர்ந்து ‘பெருந்தோள்’ என வந்து ‘சிறு நுசுப்பின் பேரமர்க்கட் பேதை’ எனும் ஒரு தொக்கு ஆகி முதல் சொல்லாகக் கருதப்படும் தொடருடன் முடிகிறது. இங்கும் ‘அடை சினை முதல்’ எனும் மூன்றும் முறை மயங்காது வருவதாகச் சேனாவரையர் விளக்கியுள்ளார்.


வரைபடம் : எண்.11

தொடர்: பெருமை தோள் சிறு நுசுப்பின் பேர் அமர் கண் பேதை

முதலாம் நிலை


இரண்டாம் நிலை


மூன்றாம் நிலை


தொடர்: பெருமை தோள் சிறு நுசுப்பின் பேர் அமர் கண் பேதை



‘உம்மை
தொக்கு’ முறை


இளம்பூரணர் தொடரமைப்பு முறையினையொட்டி இந் நீண்ட தொடருக்கு பொருள்கொள்ளும்போது மயங்கி வருவதாகக் கருதுகிறார். பொருள் கொள்ளும் முறையை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் தொடரமைப்பில் இடம்பெறுவதை மயக்கமின்மையாகச் சேனாவரையர் கருதுகிறார். ‘பெருந்தோள் சிறு நுசுப்பின் பேரமர்க்கட் பேதை’ எனும் மூன்று அடை சினை கொண்ட நீண்ட தொடரை ‘வண்ணச் சினைச் சொல்’ எனும் வாய்ப்பாட்டில் சேனாவரையர் பொருத்திக் காட்டி, ‘இத்தொடர் மயக்கமின்மையான அவருக்கு அது கருத்தன்று’ என இளம்பூரணரின் கருத்தினை மறுக்காதது போல் மறுத்திருக்கும் பாங்கு சிறப்பிற்குரியது. இங்குச் சேனாவரையர் தரும் விளக்கத்தினை உற்று நோக்கின் வேறொரு உண்மை புலனாகும். ‘பேதை’ எனும் முதற்சொல் ‘பேரமர்க்கண்’ எனும் தோகையோடு ‘வேற்றுமை பொருள்படத் தொக்கு’ என முதலாம் வழி சேனாவரையர் விளக்குகிறார். ‘பெருந்தோள்…’ எனத் தொடங்கும் தொடரில் தொடரமைப்பு வரிசை முறையில் முதலில் இடம்பெறுவது ‘பெருந்தோள்’. பின்னர் ‘சிறுநுசுப்பின்’ உள்ளது. மூன்றாவதாக இடம்பெறும் பேரமர்க்கண் என்பதை பெயர்ச்சொல்லாகிய பேதை எனும்; சொல்லோடு முதலாம் நிலையாகப் பொருத்திக் காண்பது ‘பொருள் கோடல்’ முறையினை அடிப்படையாகக் கொண்டதேயன்றி தொடரமைப்பு நிரல் முறையினை ஒட்டியதன்று. தொடரமைப்பு நிரல் முறையினை மாற்றியும் பொருள் கோடல் முறைக்காக சொற்கள் ஒன்றையொன்று அவாவி நிற்கும் எனும் உண்மையைச் சேனாவரையர்; இங்குத் தெளிவுபடுத்துகிறார். பொருள்கோடல் முறை தொடரமைப்பு நிரல் முறையினைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது தனித்து நின்று செயல்படும் எனும் பொருண்மையியல் கோட்பாடு இங்குக் குறிப்பிடத்தக்கது.

முதலொடு இரண்டு பண்பு அடுக்கி வருவதை மயங்கி வருவதாகக் கூறிய இளம்பூரணர் ‘இளம் பெருங் கூத்தன்’ எனும் தொடரில் இளமை எனும் அடை பெருமையைச் சாராது அதற்கு அடுத்து வருகிற கூத்தனைச் சாரும் என நிரல் தாண்டி பொருள் கோடலுக்கு வழி வகுத்து, பின்னர் அடை, சினை அடுக்கி வரினும் முதலொடு பொருந்துவதில் (இந்நீண்ட) தொடரியல் அமைப்புமுறை மயங்கி வருவதாகக் கருதிட, அதற்கு மாறாக சேனாவரையர் இந் நீண்ட தொடர் பொருள்கோடல் முறையில் மயக்கமின்றி இருப்பதாகத் தொடரமைப்பு வரிசை முறைவழி விளக்குகிறார்.

‘கருங்கோட்டு யானை’ எனும் தொடரில் கருமை எனும் அடை கோடு எனும் சொல்லைத் தாண்டி யானை எனும் முதலொடு பொருள் அவாவி நிற்பதையே ‘நடைபெறாதது’ என்றும் ‘குறிப்பு வேறாயினும்’ அதன் மேற்செல்லாது’ என்றும் உறுதிபட மறுத்து ‘மொழிமாறி’ வந்ததாகக் கருதும் தெய்வச்சிலையார் மூன்று ‘அடை சினை’ கொண்ட நீண்டத் தொடரினைப் பற்றி ஏதும் கூறாது தவிர்த்திருப்பதி;ல் வியப்பேதுமில்லை. பொருள் கோடலுக்காக தொடரின் வரிசை முறை மாறிப் போவதை அனுமதிக்காத அவரது செறிவான உறுதிப்பாடு இதன்வழி தெளிவாகிறது. தொடர் நிரல் முறைவழியே ‘பொருள்கோள்முறை’ அமைய வேண்டும் என மொழிக் கோட்பாட்டினைச் சார்ந்திருப்பதாகக் கருதலாம்.

சொற்களின் நிரல் வரிசை அம்மொழியின் தொடரமைப்பு முறைக்கு உட்பட்டே இடம்பெறும். ஆயினும் பொருள் கோடல் என்பது இந்தத் தொடரமைப்பு முறைக்கு உட்படாது அப்பாற்பட்டு வேறொரு பொருண்மையியல் தளத்தில் அமைகிற வரிசை முறைக்கு ஏற்ப செயல்படும் என்பது மாற்றிலக்கணம் சார்ந்த மொழிக்கோட்பாட்டின் கருத்தாக்கமாகும்.

மொழியில் சொற்கள் ஒருமொழிக்குரிய தொடர் வரிசையில் வந்து பொருள் உணர்த்துகின்றன. பொருள் உணர்த்தும்போது சொற்களின் தொடர் வரிசையிலேயே பொருளமைப்பு காணமுடியாது. ஆனால் சொற்களைக் கொண்டு தொடரமைப்பு முறையில் மொழியப்படுவதைப் புறநிலை அமைப்பாகவும் பொருள் கோடல் முறையில் சொற்கள் ஒன்றையொன்று அவாவி நிற்கும் முறையினை அகநிலை அமைப்பாகவும் மொழியியலாளர்கள் கருதுவர். அதனால் மாற்றிலக்கணக் கோட்பாட்டில் மொழி அகநிலை, புறநிலை என இருநிலை கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அகநிலை பொருண்மை சார்ந்ததாகவும், புறநிலை தொடரியல் சார்ந்ததாகவும் விளக்கப்படுகிறது. சொற்கள் நிரலாகத் தொடரமைப்பு முறை மயங்காது வரும். ஆனால் பொருள் கொள்ளும்போது, சில சமயம் மயங்கி வரலாம் எனும் இளம்பூரணரின் விளக்கத்தையொட்டிச் சேனாவரையரின் பொருண்மை நிலைச் சார்ந்த விளக்கத்தையும் தெய்வச்சிலையாரின் தொடரியல் அமைப்புமுறை சார்ந்த விளக்கத்தையும் ஒருங்கிணைத்துச் சிந்தித்திருந்தால் மொழி ஆய்வில் திருப்பு முனையாகக் கருதப்படும் மாற்றிலக்கணக் கோட்பாட்டினை உருவாகிய பெருமையினை நாம் அடைந்திருக்கலாம்.




துணைநூற்பட்டியல்.

1.அடிகளாசிரியர் (பதிப்). தொல்காப்பியம் - சொல்லதிகாரம்,
தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர், 1988.

2.ஆரோக்கியநாதன். எஸ். தொல்காப்பிய மொழியியல்,
ஓரியண்டல் லாங்மேன்ஸ்,
சென்னை, 1995


3.கல்லாடனார். (உரை). தொல்காப்பியம் - சொல்லதிகாரம்,
கழக வெளியீடு,
சென்னை, 1981.

4.சிவலிங்கனார். அ (தொகுப்). தொல்காப்பியம்-உரைவளம்- கிளவியாக்கம்,
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,
சென்னை, 1982.

5.சுந்தரமூர்த்தி. கு (பதிப்). தொல்காப்பியம் - சொல்லதிகாரம் -
சேனாவரையம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர், 1981.


6.தெய்வச்சிலையார். தொல்காப்பியம் - சொல்லதிகாரம்,
கழக வெளியீடு,
திருநெல்வேலி, 1979.

No comments:

Post a Comment